Sunday, October 21, 2007

முகம்

முகமூடி தொலைத்தேனா?
முகமூடி அணிந்தேனா?
முகம் தொலைத்த நாள் முதலாய்
விடையே தெரியாத கேள்வி இது
முகம் தொலைத்த நாளே மறந்ததால்
கேள்வியே இல்லாத கேள்வி இது

அறிந்து செய்வதே நாம் செய்ததெனில்
அனிச்சை செய‌லென்ன அ‍‍ந்நியமா?
அறிக்கை செய்வ‌தே நினைவில் இருக்கையில்
அறிக்கையாய் இருப்ப‌து தான் அ‍‍ந்நியமா?

மீன‌வனின் காத்திருப்பு மீனுக்காகவா?
பிடித்த மீனை விற்பதற்காகவா?
நான் தேடும் அந்த விடையும்
தூண்டில் தேடும் அந்த மீனின் உவமையே
உருவம் இல்லாத என் முகமும்
அந்த‌ மீனவனின் உருவகமே

Sunday, October 29, 2006

கதை கதையாம் காரணமாம் (அ) ஒரு முடிவில்லாத நீதிக் கதை.

"குமார்", பாட்டி கூப்பிட்டாள். " நேரம் ஆரதொன்னொ தூங்க வா!"
"இன்னும் 10 ஒவெர் தான் இருக்கு. முழுசா பாத்துட்டு வரேனே!"
"காலைல முழிப்பு வராம தவிப்ப. ஸ்கூல் போ வேண்டாம நாளைக்கு?", கண்டிப்பான குரலில்.
"கொஞ்ச நேரம் பாட்டி, 2 ஒவெர் பாத்துட்டு ஓடி வந்துடரேன்"
"எனக்கு என்ன? நான் தூங்கி போரேன். அப்பரம் பக்கத்துல வந்து படுத்துண்டு கதை சொல்லுனா என்னால முடியாது!"


"அட! யாருடா இது?", பொய் ஆச்சரிய்த்தோட பாட்டி என்னை தொட்டு பார்த்தாள். கதைனு சொன்ன உடனே டிவிய அப்படியே அனைச்சுட்டு பாட்டிக்கு முன்னாடி வந்து பாய் போட்டு படுத்துண்டுட்டேன். பாட்டி ரூம்முக்குல்ல வந்து என்ன பாக்காத மாதிரி போய் லைட்ட அனைச்சுட்டு வந்து பக்கத்துல உட்கார்ந்தா. புடவ நுனிய எடுத்து கழுத்த சுத்தி துடைசுன்டு அதால விசிரின்டே என்னை ஒரு கய்யால் தடவி அடையாளம் பாத்தாள்.

"கத சொல்லு!"
"பக்த மீரா கதை சொல்லரேன் கேக்கறியா?"
"வேண்டாம் வேண்டாம்! மகாபாரதம் சொல்லு. எப்படி சன்டை பொட்டா சொல்லு?"
"க்ரிஷ்ணன் கதை டா. மீரா பத்தி சொல்லரேன் கேலு."
"அய்யோ வேண்டாம் பாட்டி. மகாபாரதம் சொல்லு. அதுவும் க்ரிஷ்ணன் கத தான்"
"மீரா கதை குட்டி கத டா. முழுசா சொல்லுவேன். மகாபாரதம் எப்படி முழுசா சொல்ல முடியும்?"
"பரவா இல்ல பாதி சொல்லு பொதும்"
"பாதி போதுமா?! அபிமன்யுவா நீ?", தலையில் செல்லமாய் தட்டினாள்.

"அபிமன்யு யாரு?"
"அபிமன்யு பத்தி சொன்னதில்லயா நான்? அவன் தான் அர்ஜுனன் புள்ளை"
"சொல்லு சொல்லு", பாட்டிய இருக்க கட்டிண்டேன். ஈரப் புடவை ஜில்லுனு இருந்துது.
"அபிமன்யு, அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்த கொழந்தை. சுபத்தரா க்ரிஷ்ணனொட தங்கை." பாட்டி எப்பவும் க்ரிஷ்ணரை மட்டும் ரொம்ப ரசிச்சு ரசிச்சு சொல்லுவாள். க்ரிஷ்ணர ரொம்ப உரிமையா, செல்லமா அவன் இவன்னு தான் கூப்பிடுவாள். என்ன கதை சொன்னலும் அதுல க்ரிஷ்ணருக்கு ஒரு தனி கதை இருக்கும். க்ரிஷ்ணன் எது பண்ணினாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும் அப்படினு சொல்லுவாள்.
"அப்போ சுபத்தரா கர்பமா இருக்கரப்பொ ஒரு நாள்..."
"கர்பம்னா? உமா சித்தி மாதிரியா?"
"ஆமாம்"
"சித்திக்கு எப்ப குழந்தை பொரக்கும்?"
"இன்னும் 4 மாசம் ஆகும். கதைய கேலு. சுபத்தரா அபிமன்யுவ கர்பமா இருன்தாளா, அப்பொ ஒரு நாள் க்ரிஷ்ணன் தான் தங்கயை பாக்க போனான். அப்பொ சுபத்தரா குமாரு மாதிரி கத சொல்லு கத சொல்லுனு புடிங்கி எடுத்தாளா. யாரானு கேட்டா க்ரிஷ்ணன் இல்லனு சொல்லலாமோ? அவன் கடவுள் இல்லையோ? நியாபகம் இருக்கா திரௌபதி கதை. புடவ கேட்டவுடனே, உடனே வந்து நிருத்தாம கொடுத்துண்டெ இருந்தாரே!"
"ஆன்.. ஆன்... பெட்ல தோத்த அப்பொ"...
"அதேதான்! அதுனால க்ரிஷ்ணன் என்ன பன்னினான் கதை சொல்ல ஆரம்பிசான். என்ன கதை? நீ கேட்ட மாதிரி சன்டை கதை. சக்கரவ்யுகம் எப்படி கட்டனும். அதுல
காளாட்படை எங்க நிக்கனும், கத்தி வெச்சுண்டு இருகரவா எங்க நிக்கனும், குதிரை ஆளெல்லாம் எங்க நிக்கனும்..."
"யானை..."
"யானை இல்லாமலா... அந்த வ்யுகத்த எப்படி உடைச்சுண்டு உள்ள போரது..."
"எப்படி அட்டாக் பண்ணனும்னு சொன்னாரா?"
"எப்படி அட்டாக் பண்ணரதுனு சொன்னானா, அப்பொ பார்த்தா சுபத்தரா தூங்கி பொய்ட்டா.... ஆனா "உம்...உம்"னு யாரொ உம் கொட்டர சத்தம் ஒன்டி கேட்டுன்டெ இருந்தது.... அப்ப தான் க்ரிஷ்னன் பாத்தான்... அட நீ தானா அதுன்னான்? யாரு தெரியரதா?"

"அர்ஜுனன?"
"மக்கு. அர்ஜுனன் தான் அங்க இல்லையே.... சுபத்தரா வயத்துலேந்து அபிமன்யு உம் கொட்டிண்டிருந்தான்"
"வயத்துலேந்தா? குழந்தை தான் இன்னும் பிறக்கவே இல்லயே. அதுகு எப்படி வாய் இருக்கும்?"
"குழந்தேலுக்கெல்லாம் அம்மா வயத்துகுல்ல இருக்கரப்பொவே கை, கால், வாய், வயரு எல்லாம் வந்துடும்"
"நெஜமாவா... நானும் அப்படி தான் வந்தேனா"

"எல்லாரும் அப்படி தான்.... உம் கொட்டறது வயத்துகுல்லேந்து குழந்தை, சுபத்தரா இல்லேனு தெரிஞ்சவுடனே க்ரிஷ்ணன் என்ன பண்ணினான், கதை சொல்லறதை நிருத்திட்டான்"
"ஏன் நிருத்தினார். கொழந்தை தான் கத கேக்கரதே..."
"நன்னா இருக்கே கொழந்தை கதை கேட்டுண்டே தான் இருக்கும்... அதுனால பெரியவா கதை சொல்லிண்டே இருக்கனுமா?", பாட்டி விஷமமாக என்னை இடித்தாள்.
"ஆஅன்ன்ன்ன்", என்னை தான் சொல்லரான்னு புரிஞ்ஜின்டு நான் கொஞ்சலா சினுங்கினேன்... "நான் வுட மாட்டென்... செரி சொல்லு அப்பரம் என்ன ஆச்சு?"

"க்ரிஷ்ணன் என்ன பன்னினாலும் ஒரு அர்த்தம் இருக்கும்னு சொல்லி இருக்கேனா... க்ரிஷ்ணன நம்பு... நல்லதே நடக்கும்... இது முடிஞ்சு குழந்தை அபிமன்யு பிறந்து, வளந்து 16 வயசான அப்பொ பாண்டவாளுக்கும் கௌரவாளுக்கும் சன்டை வந்துடுத்து...மகாபாரத யுத்தம்"
பாட்டி கொஞ்சம் யோசிச்சாள்.... மூச்சு வாங்கினாள்...."பொழச்சு கெடந்தா மீதி கதை சொல்லரேன்"... பாட்டி எப்பொவும் நாளைக்குன்னு சொல்ல மாட்டா... "பொழச்சு கெடந்தா"னு தான் சொல்லுவா...
பாட்டி சொல்லற கதைக்கெல்லாம் பொதுவா ஒரு நல்ல முடிவு இருக்கும். க்ரிஷ்ணர் எதுக்காக அப்படி பண்ணினார்னு ஒரு நியாயம் சொல்லுவா. பாட்டி இந்த கதைய ஏன் பாதியில நிருத்தினாணு நான் ரொம்ப நாள் யோசிச்சு பாத்து இருக்கேன். பாட்டிக்கே க்ரிஷ்ணர் பண்ணினது நியாயம்னு படலையோ? ஒரு வழியில அபிமன்யு செத்ததுக்கு க்ரிஷ்ணர் தான் காரணம்னு தோணிடுத்தோ? இருக்காது. அப்படி பாத்தா மகாபாரதத்துல பாதி பேர் செத்ததுக்கு காரணம் க்ரிஷ்ணர் தான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுங்கர கதை தான் மகாபாரதம். ஒவ்வொருத்தரோட விதிக்கும் அவர் தான் காரணம்ங்கர மாதிரி. ஆனா இந்த விஷயம் எனக்கு அப்போ புரிஞ்சு இருக்காது. பாட்டி என் மனசுல வளர்த்த அந்த க்ரிஷ்ணர் பத்தின எண்ணத்துல ஒரு கறை படிஞ்சு இருக்கும். ஒரு வேளை இது என்ன பதி இருக்குமோ? எப்பவும் சன்டைல கெட்டவா சாகர மாதிரி தான் கதை சொல்லி இருக்கா. அபிமன்யு சன்டைல செத்து போறது எனக்கு ரொம்ப நாள் தெரியாது. அன்னிக்கு அந்த கதைய பாட்டி அதுக்கு மேல எப்படி சொல்லி எனக்கு புரிய வெச்சு இருக்க முடியும்னு தெரியல. சில விஷயங்கல தெரிஞ்சுக்கிறத விட தெரிஞ்சுக்காம இருக்கறதே நல்லது. அப்படி பாத்தா இது ரொம்ப வித்தியாசமான நீதிக் கதை. ஒரு முடிவில்லாத நீதிக் கதை.

Thursday, April 20, 2006

செப்டம்பர் 11

காணி நிலம் கேட்டாய் பாரதி
உன் பிறந்த நாளிலேயே கொடுத்தான்
பின் லேடன்
வெறும் காணி நிலம் மட்டும்

Monday, April 10, 2006

ஒரு காமிராவும் சில டைரிப்பக்கங்களும்

முரளியின் டைரி 12/3/2001


இன்று எங்கள் ஆபீஸில் உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. புரியவே இல்லை. எதற்காக இதை கொண்டாடுகிறார்கள் என்று. கொண்டாடுகிறோம் என்பதை தெரிவிக்க அந்த கூத்துக்களை புகைப்படம் வேறு எடுத்துக் கொண்டார்கள். புகைப்படம் என்பது நிஜங்கள் நினைவுகளான பின் நினைத்துப் பார்க்க உதவும் நினைவுகள். ஆனால், இங்கே எடுக்கப் படுபவை நிஜங்களா ? சாய்ந்து கொண்டு, சிரித்துக்கொண்டு, வித்தியாசம் என நினைத்து முட்டாள் தனமான செய்கைகள் செய்து கொண்டு, கேமிராவிற்கு பயந்து அது புகைக்கும் வரை பவ்யமாக பணிந்து நின்று கொண்டிருப்பது என இவர்கள் செய்யும் அனைத்துமே முட்டாள் தனமானவையே.

முரளியின் டைரி 14/3/2001


இந்த விளையாட்டுப் போட்டிகளில், அதுவும் முக்கியமாக கிரிக்கெட் போட்டிகளில் புகைப்படங்கள் எடுப்பது என்பது அவசியம் என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். இன்றைய செய்தித்தாளை பார்த்த பின்னே அதன் உண்மையான அர்த்தம் விளங்கிற்று. மூன்று வாரத்திற்கு முன்பு நடந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற விளையாட்டு வீரனின் புகைப்படம் (அவர் பயிற்சியில் இருந்த போது). அவர் அற்புதமாக விளையாடியது உண்மையென்றாலும் அவரது புகைப்படம் அங்கே ரொம்ப அவசியமா?
இது இவ்வளவு முட்டாள்தனம் என தெரிந்தும் சாகருக்கு இன்று ஒரு காமிரா வாங்கி கொடுத்தேன்.


சாகரின் டைரி 11/3/2001


இன்று முரளி என் காமிராவை தொலைத்து விட்டான்


சாகரின் டைரி 14/3/2001


எவ்வளவு வற்புறுத்தியும் முரளி கேட்காமல் இன்று ஒரு புது காமிரா வாங்கி கொடுத்தான்.

என்னை கதை எழுத தூண்டிய (உசுப்பேத்திய) அன்பு நண்பனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனது ஆசைப்படியே கதை சில டைரிப்பக்கஙள் மூலமாக.

Friday, April 07, 2006

தமிழன்

கூட்ட நெரிசலில்,
உச்சி வெயிலில்,
இரு கைகளில், தோள்களில்,
கழுத்தினில்
பாரம் சுமந்த கூலி கத்தினான்


"வழி வழி"

மறுமலர்ச்சி

அவமானத்தாலும்,
நண்பனின் அறிவுரையாலும்,
குடும்ப சூழ்நிலையாலும்,
இறந்த என் காதல்துளிர்விடுகிறது...
சாலையோர கடைகளில் உன் பெயர் கொண்ட
பெயர் பலகைகளை
பார்க்கும் போது.

Wednesday, April 05, 2006

விளையாட்டு

"எனது மகனை கொல்ல போகிறேன்".

முதலில் அந்த மின்னஞ்சலை மற்ற விளையாட்டு (கிறுக்கு ) அஞ்சலாக ஒதுக்கி விட நினைத்தாலும், மனம் ஒப்பாமல் அதனை குற்றப் பிரிவு அதிகாரியின் பார்வைக்கு அனுப்பினார் அந்த அதிகாரி.வழக்கமாக செய்ய வேண்டிய கையெழுத்துகள் பறிமாற்றத்துக்கு பின் அந்த அஞ்சல் அனுப்பப்பட்ட IP ADDRESS பின் தொடரப்பட்டு, அவரது அடையாளங்கள் ஆராயப்பட்டு, அவருக்கு ஒரு மகன் இருப்பதும், அவருக்கு மனநிலை சரியில்லை என்பதும் கண்டுபிடிக்க மூன்று நாட்கள் ஆனது.

அவரது வீட்டின் சோதனையில் அவரை பற்றி கேள்வி பட்டவை உருதியாயின. ஆனால் அவரும், அவரது மகனும் வீட்டில் இல்லை.சில பல போலீஸின் சாதுர்யத்தால், அந்த மறைவிடம் கண்டு பிடிக்கப்பட்டது.

வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது அங்கே அந்த தந்தையாகபட்ட மனிதர் உட்கார்ந்து கொண்டு ஏதோ படித்துக்கொண்டிருந்தார். போலீஸை பார்த்தவுடன் பதறாமல் எழுந்தார். பிறகு, "நான் சொல்ல வில்லையா மோகன்? போலீஸ் எப்படியும் நம்மை கண்டு பிடித்து விடுவார்கள். இதோ அவர்கள் வந்து விட்டார்கள்." என்றபடி அடுத்த அறைக்குள் சென்றார்.

போலீஸ் மெதுவாக அந்த அறையை அடைந்த போது "போதும் மோகன் ! இது என்ன விளையாட்டு ? நீ தான் தோற்று விட்டாய் அல்லவா? பிறகு ஏன் இன்னும் எழ மறுக்கிறாய்? பாருங்கள் Sir ! நாங்கள் சும்மா தான் விளையாடினோம்." என்றபடி யாரையோ எழுப்ப முயன்று கொண்டிருந்தார்.

எட்டி பார்த்த போலீஸ் அதிகாரியின் கண்களில் அந்த சிறுவனின் பிணம் தெரிந்தது.

Wednesday, March 29, 2006

விடியல்

தேதி குறிப்பிடப்பட்ட மரணத்தின் வலி
என் மனதில்...
துணை வேண்டாம் என துணை நின்ற அக்கா,
வீட்டிற்கு வந்து எடுத்துரைத்த ஆசிரியர்,
இவர்கள் வார்த்தையை விட என் தந்தைக்கு
அந்த நாலு பேர் வார்த்தைகளே பெரிதாய் தோன்றின.


உட்கார்ந்து தேய்த்த மர பலகைகள்
எழுதி தேய்த்த கரும் பலகைகள்
குட்டி போட்ட மயில் இறகுகள்
இவை எல்லாம் இன்றைக்கு காட்சிகள்
நாளைக்கு நினைவுகள்
தோழி ப்ரியா விடை கொடுக்க
என் பள்ளிக்கு பிரியா விடை கொடுத்தேன்

வழியில் அஸ்தமனத்தில் ஆதவனை பார்த்தேன்
நிறம் மாறியிருந்த கண்களில் சோகம் பார்த்தேன்
காரணம் கேட்டேன்
"நடிப்பு வேண்டாம்! என் அஸ்தமனம் தெரியவில்லையா?"
பார்வையில் மறைந்திருந்த வெப்பம் பதிலில் தெரிந்தது.
"தெரியும். உனக்கு நாளை ஓர் விடியல் வரும்.
ஆனால் எனக்கு?"


( SWADES படத்தில் வரும் ஒரு பெண்ணின் பார்வையின் பாதிப்பே இந்த கவிதை )